30 ஆண்டுக்கு பின் ஆர்.சி., காலனி பகுதி மக்களுக்கு சாலை வசதி

ஊட்டி,ஜன.22:  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஆர்.சி., காலனி பகுதியில் 30 ஆண்டுக்கு பின் எம்எல்ஏ.,வின் முயற்சியால் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பிங்கர் போஸ்ட் பகுதியில் ஆர்.சி., காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் சாலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இச்சாலையை சீரமைக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனால், கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி ஊட்டி எம்எல்ஏ., கணேஷை சந்தித்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, ஊட்டி எம்எல்ஏ., கணேஷ், ஆர்.சி., காலனி பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதனை தொடர்ந்து, இச்சாலையை சீரமைக்க வனத்துறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். தற்போது வனத்துறையினர் பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து ஆர்.சி., காலனிக்கு செல்லும் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்து வந்த மக்கள் தற்போது ஊட்டி எம்எல்ஏ., கணேஷிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: