கோவை முகமது ரபிக்கு `கோட்டை அமீர் விருது’

கோவை, ஜன. 22:  தமிழகத்தில், மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோவையை சேர்ந்த ’கோட்டை அமீர்’ பெயரால் தமிழக அரசு சார்பில் “கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது” ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விருது, மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் நபருக்கு, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான விருது, கோவை சாயிபாபாகாலனி பகுதியை சேர்ந்த முகமது ரபிக்கு (47) வழங்கப்பட்டுள்ளது. வரும் 26-ம்தேதி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், இவ்விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. முகமது ரபி, பல்சமய நல்லுறவு இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் கவுரவ தலைவராக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஒருங்கிணைப்பாளராக எம்.எம்.ராமசாமி ஆகியோர் உள்ளனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என பல சமயத்தை சேர்ந்தவர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். இது, ஒரு தன்னார்வ அமைப்பு ஆகும். அத்துடன், இந்திய கலாச்சார நட்புறவு இயக்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஆகியவற்றின் முக்கிய பொறுப்பாளராகவும் உள்ளார். இவர், சிறந்த சமூக சேவையாளர். கல்வி, மருத்துவம் என ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

கோவையில் கொரோனா முதல்அலை மற்றும் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, முழுஅடைப்பு காரணமாக பிளாட்பாரவாசிகள் மற்றும் ரயில் பயணிகள் உணவின்றி தவித்தனர். அப்போது, இவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று மாத காலம், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பிரியாணி உள்ளிட்ட இலவச உணவு வழங்கினார். ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் நகையை  விற்று, உணவு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதும், உதவிசெய்யும்  மனநிலையில் இருந்து பின்வாங்கவில்லை. இதன்மூலம், புலம்பெயர் மக்கள் மற்றும் ஏழைகள் பல ஆயிரம் பேர் பயனடைந்தனர். ஜாதி, மதம், பேதம் இன்றி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்படும் தன்மை கொண்ட காரணத்தால், கோவை மாவட்ட நிர்வாகம், இவரது பெயரை, இவ்விருதுக்கு பரிந்துரை செய்தது. இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மாணவர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு போட்டிகளின்போது, மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இவர் ஒருபோதும் தயங்கியது இல்லை. இவரது மனைவி பெயர் பாத்திமா. முகமது தல்சா (14), முகமது காசிம் (12) என்ற இரு மகன்கள், ஆயிஷா (9) என்ற மகள் உள்ளனர்.

Related Stories: