மன்னார்குடி நகராட்சி பகுதியில் வியாபாரிகளே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்

மன்னார்குடி, ஜன.22: மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் வர்த்தக சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றினர்.மன்னார்குடி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் அனுமதித்த அளவை தவிர வேறு வகையான ஆக்கிரமிப்புகளில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் அவர்களாகவே முன்வந்து உடனடியாக அகற்றி கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு காவல்துறை பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் அண்மையில் அறிவித்திருந்தார்.பொது மக்கள் நலன் கருதி வர்த்தகர்களுக்கு பாதிப்பின்றி நகராட்சி நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வர்த்தக சங்கம் தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், பொதுச் செயலாளர் அசோகன், உள்ளாட்சி கடைகள் சங்க மாவட்ட தலைவர் கருணாநிதி, வர்த்தக சங்க மாவட்ட துணை தலைவர் பாரதிஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் உறுதியளித்திருந்தனர்.

இதையடுத்து, மன்னார்குடியில் உள்ள பெரும்பாலான வர்த்தகர்கள் தங்கள் கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதித்த இடங்களை தவிர ஏனைய ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்றி நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இந்த நிலையில், நேற்று காலை முதல் நகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் துவங்கியது. இப்பணிகளை வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், டிஎஸ்பி பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகளின் எச்சரிக்கை மீறி சில இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் வர்த்தக சங்க நிர்வாகிகளின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் கூறுகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நலன்கருதி நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வர்த்தகர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் தெரிவித்தார். நகராட்சி நிர்வாகத்தின் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: