முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமனம் செய்ய வேண்டும்

முத்துப்பேட்டை, ஜன.22: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு செயல்அலுவலர் நியமிக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட அமைப்பு செயலாளர் தக்பீர் நெய்னாமுகமது தலைமையில் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா, நகர துணைத்தலைவர் முகமதுஹசன் உள்ளிட்ட கட்சியினர் நேற்று பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:முத்துப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சிக்கு சமீபகாலமாக நிரந்தர செயல்அலுவலர் இல்லை. சமீபத்தில் ஒரு நிரந்தர செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதுநாள்வரை அவர் வந்து பொறுப்பு ஏற்கவில்லை என தெரியவருகிறது. இதனால் அலுவலகத்தில் உள்ள மக்கள் பணிகள் பெருமளவில் முடங்கியுள்ளது. அதேபோல் நகர் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் முடங்கியுள்ளது. ஆகையால் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு நிரந்தரமாக பேரூராட்சி அலுவலரை நியமனம் செய்யவேண்டும். அதுவரை தற்காலிக பொறுப்பு அதிகாரியை தினந்தோறும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட அங்கிருந்த அலுவலர் வெங்கட்ராமன் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: