×

80 நாட்களுக்கு மேல் 58ம் கால்வாயில் தொடர் நீர் திறப்பு உசிலம்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி, ஜன. 21: வைகை அணையிலிருந்து 80 நாட்களுக்கும் மேல் 50 கிராம கால்வாயில் தண்ணீர் திறப்பதால், உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை அமைந்துள்ளது. கடந்தாண்டு தொடர் மழையால் அணை 3 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும், கடந்த நவம்பர் முதல் தற்போது வரை வைகை அணை முழுக்கொள்ளவில் உள்ளது. பாசனத்திற்காக தண்ணீர் திறந்தும், தொடர் நீர்வரத்தால் நீர்மட்டம் குறையவில்லை. இந்நிலையில், வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரத்தில் உள்ள 33 கண்மாய்களில் நீரை நிரப்பி பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில், 58 கிராம கால்வாயில் கடந்தாண்டு நவம்பர் முதல் வாரத்தில் வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். கடந்த 3 மாதத்திற்கும் மேலாக அணை நீர்மட்டம் சராசரியாக 70 அடியாக இருப்பதால், 80 நாட்களுக்கும் மேலாக 58 கிராம கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், உசிலம்பட்டி வட்டார கண்மாய்களில் 70 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ