×

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மின் மோட்டார் பம்ப் செட் அமைக்க மானியம்

புதுக்கோட்டை, ஜன.21: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் வழங்கும் திட்டம் தனிநிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.‘இறைக்கிற கிணறு சுரக்கும்” எனும் பழமொழிக்கேற்ப கிணறுகளிலிருந்து பாசனத்திற்கு நீரினை இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் தொலை நோக்குத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, பாசன நீரை இறைத்திட புதிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் புதிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்ப் செட்டுக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விபரம் மற்றும் வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன், இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை அலுவலகத்திலும், அறந்தாங்கி கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, ராஜேந்திரபுரம், அறந்தாங்கி உபகோட்டத்திலும் மனுக்கள் அளித்து பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


Tags : Pudukkottai district ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...