கோயிலை குப்பை மேடாக்கிய மாநகராட்சி நிர்வாகம் வீடுகள் தோறும் சேகரித்து கொட்டும் அவலம் வேலூரில் துர்நாற்றத்தின் பிடியில் பக்தர்கள்

வேலூர், ஜன.21:வேலூரில் கோயில் முன் வீடுகள் தோறும் சேகரித்த குப்பைகளை மலைபோல் மாநகராட்சி நிர்வாகம் குவித்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட மாற்று பயன்பாடுகளுக்கு அனுப்பவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மாநகர் முழுவதும் 43 இடங்களில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மாநகராட்சி சார்பில் தினந்தோறும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை வீடுகள் தோறும் சென்று சேகரித்து வரப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் ஒன்றாக கொட்டுவதால் மீண்டும் அதை பிரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக வீடுகளில் சேகரித்து மாநகாரட்சி ஊழியர்களிடம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இது ஒருபுறம் இருக்க, வேலூர் சார்பானமேடு பிடிசி ரோட்டில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கோயில் முன் மூட்டை மூட்டையாக மலைபோல் குப்பைகள் நீண்ட நாட்களாக குவிந்து கிடக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களே வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பல நாட்களாக குப்பைகள் தேங்கி கிடப்பதால் கொசுக்கள், ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளனர். சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:வேலூர் மாநகராட்சியில் குப்பை தொட்டி இல்லா மாநகராட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகள் தோறும் மாநகராட்சி ஊழியர்கள் சேகரிக்கும் மக்கும், மக்காத குப்பைகளை மூட்டைகளில் கட்டி கொண்டு வந்து இங்கு மலைபோல் வீசிவிட்டு செல்கின்றனர். கோயில் எதிரே இதுபோன்ற செயல்களில் மாநகராட்சி ஊழியர்களே ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கும் செயலாக உள்ளது. மேலும் கோயில் சுற்றுச்சுவரிலும் அரசியல் கட்சி விளம்பரங்கள் செய்துள்ளனர். இதை தவிர்க்க சுவாமி சிலைகளை ஓவியம் வரைந்தால் நன்றாக இருக்கும். குப்பைகள் கொட்டுவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடித்து கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: