×

எண்ணெய் வித்துகளில் அதிக மகசூலுக்கு சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தலாம் வேளாண் துறை அட்வைஸ்

ராமநாதபுரம், ஜன.20: எண்ணெய் வித்துகளில் அதிக மகசூலுக்கு, விலை குறைந்த மணிசத்து உரமான சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்தலாம் என ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி, தென்னை மற்றும் இதர பயிர்களுக்கு அடியுரமாக டிஏபி பயன்படுத்தப்படுகிறது. டிஏபி தயாரிப்பதற்கான பாஸ்போரிக் அமில மூலப்பொருள் இறக்குமதி செய்யப்படுவதால் டிஏபி உற்பத்தி செலவு அதிகமாகி உள்ளது. இதனால், டிஏபி உரம் உரிய நேரத்தில் கிடைக்க சிரமம் ஏற்படுகிறது. விலை அதிகமாக உள்ளது. எனவே, டிஏபிக்கு மாற்றாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தை விவசாயிகள் பயன்படுத்தி மகசூல் பெறலாம். சூப்பர் பாஸ்பேட் உரமானது நம் நாட்டிலே தயாராவதால் குறைந்த விலையில் விவசாயிகள் எளிதில் பெற்று பயன்பெறலாம்.

சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்து, 10 சதவீதம் கந்தக சத்து, 20 சதவீதம் கண்ணாம்பு சத்து, சிறிதளவு நுண்ணூட்ட உரங்கள் உள்ளன. சூப்பர் பாஸ்பேட் உரத்தில் மட்டுமே கந்தக சத்து கிடைக்கிறது. நீரில் எளிதில் கரையும் மணிச்சத்து கிடைப்பதால் பயிர், வேர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எண்ணெய் வித்து பயிர்களில் கந்தக சத்து அதிகம் தேவைப்படுவதால் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் வித்துகளின் மகசூல் அதிகம் கிடைக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள எண்ணெய் வித்து பயிர்களான தென்னை, நிலக்கடலை, கரும்பு, தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான சூப்பர் பாஸ்பேட் உரத்தை வாங்கி பயன்பெறலாம்.

வளர்ந்த தென்னை மரத்திற்கு யூரியா 1.2 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 2 கிலோ உரமிட்டு பயன்பெறலாம். சூப்பர் பாஸ்பேட் ஒரு மூட்டை விலை கோரமண்டல் உர நிறுவனம் ரூ.380, கோவை பயோனியர் உர நிறுவனம் ரூ.390, ஜெமினி உர நிறுவனம் ரூ.420, கிரீன் ஸ்டார் உர நிறுவனம் ரூ.425 ஆகும். எனவே டிஏபிக்கு மாற்றாக குறைந்த விலை சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தி மகசூல் பெறலாம். விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் வடிவில் பயிர்களுக்கு அளிக்கலாம். சூப்பர் பாஸ்பேட் உர பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் டாம் பி சைலஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ