கல்வி உதவி தொகை பெற எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவிதொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021- 2022ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், மத்திய அரசு நிதி ஆதரவிலான கல்வி உதவித்தொகை, போஸ்ட் மெட்ரிக் திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (10ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) ஆகிய திட்டங்களின் கீழ், கல்வி நிறுவனங்கள் மூலமாக புதிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை இணையதள முகவரி (escholarship.tn.gov.in) வழியில் பதிவேற்றம் செய்ய, கடந்த 6ம் தேதி முதல் திறக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 10ம் தேதி வரை விண்ணப்பிக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களிடமிருந்து, புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சாதிச்சான்று, வருமான சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் எண், வருகை சான்று, தேர்ச்சி பெற்ற நகல் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் escholarship.tn.gov.in கல்வி இணையதள வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: