விருத்தாசலம், ஜன. 20: விருத்தாசலம் அருகே பரவளூர் ஊராட்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கான சுடுகாடு உள்ளது. அந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வழியில்லாமல் அருகிலுள்ள மணிமுக்தாற்றில் புதைத்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் புதைக்க இடவசதி இல்லாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மயான பாதை கேட்டு போராடி வந்த நிலையில் அரசு அவர்களுக்கென மயான பாதை அமைத்து கொடுத்துள்ளது. ஆனால் அந்த பாதையை தனிநபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக தெரிகிறது. இதனால் அந்த மயான பாதையை மீட்டுத்தர வேண்டும் என கோரி நேற்று பழங்குடி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் அப்பகுதி மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் தங்கள் பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்வதற்கான பாதையை மீட்டுத்தர வேண்டும். பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் கோரிக்கை நிறைவேறாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் மனுவின் மூலமாக தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் ராம்குமார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் திரும்பி சென்றனர்.