×

மதில் சுவரில் விளம்பரங்களை தடுக்கும் வகையில் திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இரும்பு வலையால் தடுப்பு அமைப்பு

திருவாரூர், ஜன.20: அரசு அலுவலக மதில் சுவரில் விளம்பரங்களை தடுக்கும் வகையில் திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இரும்பு வலை கொண்டு தடுப்பு வைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலக சுவர்களில் விளம்பரங்களை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட மின் மேற்பார்வை பொறியாளராக தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தாரா என்பவர் திருவாரூர் துர்க்காலயாசாலையில் இயங்கிவரும் மின்வாரிய அலுவலகம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சுவர்களில் அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் எந்த ஒரு விளம்பரம் செய்ய முடியாத அளவில் சுவற்றில் புதிதாக வர்ணம் தீட்டி இரும்பு வலைகளை கொண்டு தடுப்புகளை அமைத்துள்ளார்.இதுபோன்ற ஒரு காட்சியினை இதுவரையில் திருவாரூர் பகுதி பொதுமக்கள் கண்டிராத நிலையில் சம்மந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளருக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துள்ளதுடன் இதுபோன்ற அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்தமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நுகர்வோர் அமைப்பின் பொதுச் செயலாளர் ரமேஷ் கூறுகையில், பொதுவாக அரசு அலுவலர்களின் சுவர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் விளம்பரங்கள் மட்டுமின்றி பொதுமக்களின் கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள் மற்றும் இறப்பு போன்ற காரியங்களுக்காக அச்சடிக்கப்படும் போஸ்டர்கள் ஒட்டும் இடமாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் எங்கு உள்ளது என தெரியாமல் போகும் நிலை இருந்து வருகிறது. இதுமட்டுமன்றி மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை போன்றவற்றில் இருந்து வரும் பாலங்களிலும் இதுபோன்ற விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதன்மூலம் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே இதற்கு முன் உதாரணமாக திருவாரூர் மின்வாரிய அலுவலகத்தில் இதுபோன்று வர்ணம் தீட்டப்பட்டு கம்பி வலை கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது என்றார்.


Tags : Thiruvarur Electrical Supervising Engineer's Office ,
× RELATED போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு