தனியாரிடம் பங்கு விற்பனையை கைவிடக்கோரி எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் சங்கத்தினர் வாயிற்கூட்டம்

திருவாரூர்,ஜன.20: தனியாரிடம் பங்கு விற்பனையை கைவிடக்கோரி எல்ஐசி ஊழியர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தினர் வாயில் கூட்டத்தில் ஈடுபட்டனர்.எல்ஐசி நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட ஜனவரி 19ம் தேதியை கொண்டாடும் வகையில் எல்ஐசி தேசியமய தினமாக நாடு முழுவதும் அலுவலர்களும், ஊழியர்களும், முகவர்களும் நேற்று கொண்டாடினர். இதனையொட்டி பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என வலியுறுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற இணைய தளங்கள் மூலம் அலுவலர்கள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் தங்கள் பிரச்சாரத்தை மக்கள் அறியும் வகையில் துவங்கினர். மேலும் தேசிய தினத்தையொட்டி திருவாரூர் எல்ஐசி அலுவலகத்தில் பாலிசிதாரர் சிறப்பு சேவை மையத்தை முதுநிலை மேலாளர் ரங்கராஜன் துவக்கி வைத்த நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது வாயில் கூட்டம் நடைபெற்றது.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சைக் கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மிக குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து ,எந்த கோரிக்கைக்களுகாக துவங்கப்பட்டதோ அந்த கோரிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிற வேளையில், எல்ஐசி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை விளக்கி எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் மதுசூதனன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் ஜெயராஜ்,காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் சித்தார்த்தன், கமலவடிவேல், லிகாய் முகவர் சங்க விஜயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories: