×

5 நாட்களுக்கு பிறகு பெரியபாளையம் பவானியம்மன் கோயில் திறப்பு: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா ஆகஸ்ட் மாதம் 16 அல்லது 17ம் தேதி தொடங்கும்.   இந்த விழா 10 வாரங்கள் நடக்கும். இந்த திருவிழாவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா  என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ,  மாட்டு வண்டி உள்பட பல வாகனங்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வருவார்கள்.

அவர்கள், சனிக்கிழமை இரவு தங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் (18ம் தேதி) வரை 5 நாட்கள் கோயில் மூடப்பட்டு இருந்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள், கோயிலுக்கு உள்ளே சென்று தரிசனம் செய்ய முடியாததால் கோயில் பின்புறம் உள்ள வேப்பமரத்திலும், புற்று பகுதிகளிலும் அம்மனை வழிபட்டு, தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில், 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று கோயில் திறக்கப்பட்டது. இதையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில், பக்தர்கள் பவானி அம்மனை தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதே போன்று பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


Tags : Periyapalayam Bhavaniyamman Temple ,Alaimothiya Devotees ,
× RELATED பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில்...