×

இதுவரை இல்லாத புதிய உச்சம் புதுவையில் ஒரே நாளில் 2,093 பேருக்கு கொரோனா பெண் உட்பட 3 பேர் பலி

புதுச்சேரி, ஜன. 19: புதுச்சேரியில், இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 6,028 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-1,715, காரைக்கால்-279, ஏனாம்-54, மாகே-45 என மொத்தம் 2,093 (34.72 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெங்கட்டா நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த 81 வயது முதியவர், சாந்தி நகர் திரு.வி.க. வீதியை சேர்ந்த 32 வயது பெண் ஆகிய இருவரும் ஜிப்மர் மருத்துவமனையிலும், காரைக்கால் வெள்ளாளர் நகரை சேர்ந்த 59 வயது முதியவர் காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,893 ஆகவும், இறப்பு விகிதம் 1.35 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,40,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஜிப்மரில் 72 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 42 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 10,230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 10,393 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 256 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,28,424 (91.27 சதவீதம்) ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு மே 11ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,049 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை செயலர் உட்பட6 ஊழியர்களுக்கு தொற்று புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சட்டசபையில் 2 தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டசபை செயலர் முனிசாமி உள்பட சட்டசபையில் பணிபுரியும் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Puduvayal ,
× RELATED புதுவயலில் ரூ.5.40 கோடியில் கழிவுநீர்...