×

கோவைக்கு வரும் வெளிநாட்டினரை கண்காணிப்பதில் அலட்சியம்

கோவை, ஜன.19:  கோவைக்கு வரும் வெளிநாட்டினரை வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிப்பதில் சுகாதாரத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. கோவையிலும் ஒமிக்ரான் தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டுள்ளார். ஒமிக்ரான் பரவலை தடுக்க பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என ரிசல்ட் வந்தாலும் கூட 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். பின்னர், 8-வது நாள் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் நபர்களிடம் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் இரண்டு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி கொண்டால்போதும் எனவும், மூன்றாவது நாள் சென்று கொரோனா பரிசோதனையை சுயமாக செய்து கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனர். அதிகாரிகள் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவதால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தவிர, வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை கண்காணிப்பதில் சுகாதாரத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அதிகாரிகளும் அரசின் விதிமுறைகளை சரியாக பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்