×

வெளிமாநிலத்தவர்கள் 600 பேர் சொந்த ஊருக்கு சென்றனர் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் வேலூரில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுடன் தங்கியிருந்த

வேலூர், ஜன.19:
வேலூரில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுடன் தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் 600 பேர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்ததுடன், கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகள் பின்பற்றாதவர்கள் மீது அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வேலூர் மாவட்டத்திலும் தினசரி கொரோனா எண்ணிக்கை 400 ஐ தாண்டி பாதிவாகி வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக பலர் வேலூர் வந்து தங்கி இருந்தனர். இவர்களில் நோயாளிகள் ஒருவருடன், அவர்களது உறவினர்கள் 3 பேர் முதல் 4 பேர் வரையில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள் லாட்ஜ்களில் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருவதால், நோயாளிகளுடன் ஒருவர் மட்டும் இருக்கலாம். மற்றவர்கள் சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, கொரோனா ஊரடங்கு தீவிரப்படுத்தக்கூடும் என்பதால், நோயாளிகளுடன் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டினர், பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 600 பேர் வரையில் அவர்களாகவே சொந்த ஊருக்கு திரும்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, சிகிச்சைக்காக வந்து வேலூர் லாட்ஜ்களில் தங்கியிருந்த நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் 600 பேர் வரையில் தாங்களாகவே சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு எந்தவித தடையும் இல்லை’ என்றனர்.

Tags : Vellore ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...