×

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்திக்கடன் திரளான பக்தர்கள் பங்கேற்பு செங்கம் அருகே முருகர் கோயிலில் தைப்பூச விழா

செங்கம், ஜன.19: செங்கம் அருகே முருகர் கோயிலில் நடந்த தைப்பூச விழாவில் பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.

அதன்படி, பாலசுப்பிரமணியர் கோயிலில் நேற்று நடந்த தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பின்னர், விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும், முள்வேலியில் படுத்தும், அம்மிக்கல்லில் மாவரைத்தும், சுவாமிக்கு பொங்கலிட்டும் வழிபட்டனர்.மேலும், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் வடைகளை சுட்டு சுவாமிக்கு படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அந்த வடைகளை குழந்தை வரம் வேண்டி சுவாமியை வழிபட்ட பெண் பக்தர்கள் பிரசாதமாக பெற்றுச்சென்றனர்.இவ்விழாவில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர், மாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Thaipusam ,Murugan Temple ,Chengam ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...