ஏர்வாடி அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ விசாரணை

ஏர்வாடி, ஜன.19: ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் இளவரசி (27). இவருக்கும் உறவினரான ராமையன்பட்டி அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சுடலைமணி மகன் மாரித்துரைக்கும் கடந்த 5.12.2016ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். தற்போது இளவரசி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மாரித்துரைக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் மது அருந்தி விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் அக்கம், பக்கத்தில் கடன் வாங்கி செலவு செய்தார். இதுதொடர்பாக அவருக்கும், அவரது மனைவி இளவரசிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இளவரசி குழந்தையுடன், தனது பெற்றோர் ஊரான சிறுமளஞ்சிக்கு வந்தார். கடந்த 15ம் தேதி சிறுமளஞ்சிக்கு வந்த மாரித்துரை மனைவி இளவரசியை சந்தித்து அவரை சமாதானம் செய்தார். மீண்டும் வந்து தன்னுடன் அழைத்து செல்வதாக கூறி விட்டு சென்று விட்டார். இதற்கிடையே சம்பவத்தன்று இளவரசி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது சகோதரர் சேதுராமலிங்கம் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மரணம் குறித்து நெல்லை ஆர்.டி.ஓவும் விசாரித்து வருகிறார்.

Related Stories: