சுதந்திர போராட்ட தலைவர்களை அவமதித்த ஒன்றிய அரசு அலுவலர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்

நாகை, ஜன.19: தமிழக சுதந்திர போராட்ட தலைவர்களை அவமதித்த ஒன்றிய அரசு அலுவலர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, தமிழர்களின் பங்கையும் எடுத்து இயம்பும் விதத்தில் அமைந்திருந்த வாகன ஊர்தியினை ஊரில் இருந்த தலைவர்களை சர்வதேசத்திற்கு தெரியாது என்று கூறி ஒன்றிய அரசு அலுவலர்கள் நிராகரித்தனர். இதை சிவசேனா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசு அலுவலர்களின் செயல்பாடு, தமிழகத்தின் மாண்பையும் தொன்மை சிறப்பையும் விடுதலைப் போராட்டத்தில் தன் உயிரையும் உடமையையும் இழந்து தேசத்திற்காக அர்ப்பணித்த தியாகச் சுடர்களின் ஒப்பற்ற உயர்ந்த பணியையும் தியாகத்தையும் அவமதித்தது போல் ஆகிவிட்டது. வஉசிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை சர்வதேச நாடுகளுக்கு தெரியாது என்று கூறுவது ஆணவத்தின் உச்சம் மட்டுமல்ல அறியாமையின் வெளிப்பாடு ஆகும். இது தமிழகத்தையும், தமிழக மக்களையும் தமிழர்களின் சுதந்திர போராட்ட தியாகத்தையும் அவமானப்படுத்தியதாக உள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தில் ஊர்தியில் இருந்த மாபெரும் தலைவர்கள் வரலாறு சர்வதேசத்திற்கு தெரியாது என்று சிறுபிள்ளைத்தனமான காரணம் கூறி அவமதித்து, அனுமதிக்க மறுத்த ஒன்றிய அரசு அலுவலர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். பிரதமர் மோடி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகத்தின் மாண்பையும் மரியாதையும் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு தமிழ் தலைவர்களின் வீரத்தையும் வெளிக்காட்டும் விதத்தில் தமிழக ஊர்திக்கு உடனடியாக குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: