×

பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பணைகளில் குளித்தால் கடும் நடவடிக்கை

பெரம்பலூர்,ஜன.19: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளில், தடுப்பணைகளில் பொதுமக்கள், இளைஞர்கள் குளிக்கவோ மீன்பிடிக்கவோ கூடாது என்ற உத்தரவை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார துறை) உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் கிராமத்தின் அருகே கல்லாற்றில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வட கிழக்கு பருவ மழை காரணத்தால் ஆற்றில் அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

தடுப்பணை உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் உள்ளே சென்று குளிக்கவோ மீன் பிடிக்கவோ அனுமதி கிடையாது. தடையை மீறும் நபர்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவர் என்று எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.இரு பக்கமும் கரைகளை உயர்த்தி மண்கரை அமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில், விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தடையை மீறி, ஆபத்தான தண்ணீர் இருக்கும் பகுதிக்கு சென்று குளிக்கும் பொழுது மணலிலோ, சுழலிலோ சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கடந்த 14ம் தேதி இனாம்அகரம் கிராமத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தடுப்பணையில் குளிக்க சென்று தண்ணீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தடுப்பணைகள் மற்றும் விசுவக்குடி, கொட்டரை நீர்த்தேக்கங்கள் போன்ற பகுதிகளில் ஏற்கனவே எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அத்துமீறி தடுப்பணை மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளில் குளிக்கவோ மீன்பிடிக்கவோ செல்லக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறும் நபர்கள் மீது காவல்துறை மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி