×

கொரோனாவால் பெற்றோரை இழந்த 517 குழந்தைகளுக்கு ரூ.15.79 கோடி உதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 517 குழந்தைகளுக்கு ₹15.79 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 674 குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க சமூக பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா நோய் தொற்று பரவல் இருந்து வருகிறது. அதுவும் இரண்டாவது அலையில் கடுமையான மூச்சுத்திறணலுக்கு ஆளாகி பலரும் இறந்தனர். வயதானவர்கள், இளைஞர்கள் என யாரையும் விட்டு வைக்காமல், கொரோனா உயிரிழப்பு கோரத்தாண்டவம் ஆடியது. இந்த திடீர் உயிரிழப்புகளால், குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிவாரணத்தை அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தாய், தந்தை என பெற்றோர் இருவரையும் கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு ₹5 பாண்ட்டும், காசோலையும், தாய் அல்லது தந்தை என ஒருவரை இழந்த குழந்தைக்கு ₹3 லட்சத்திற்கான காசோலையும் தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கொரோனாவிற்கு பெற்றோரை இழந்த குழந்தைகள் பட்டியலை சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எடுத்து, உரிய நிவாரணத்தை வழங்கி வருகின்றனர்.

இந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இதுவரை, கொரோனாவால் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கொண்ட 793 பெற்றோர் உயிரிழந்துள்ளனர். இதனால் 1,191 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை சமூக பாதுகாப்புத்துறை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் பெற்றோர் இருவரையும் இழந்த 14 குழந்தைகளின் பெயரில் தலா ₹5 லட்சத்திற்கான பாண்ட் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியதும், அந்த பாண்ட் பலனை அவர்கள் பெற ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பெற்றோரில் ஒருவரை இழந்த 503 குழந்தைகளுக்கு தலா ₹3 லட்சத்திற்கான காசோலையை சமூக பாதுகாப்புத்துறை வழங்கியுள்ளது. இந்த தொகையை கொண்டு, கல்விக்கான ஏற்பாடுகளை அவர்களின் குடும்பத்தார் செய்து வருகின்றனர். மேலும் 674 குழந்தைகளுக்கு இந்த நிவாரண தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்துள்ளனர்.  

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில்,‘‘சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் பெற்றோரை இழந்த 517 குழந்தைகளுக்கு ₹15.79 கோடி நிவாரண தொகையை கொடுத்துள்ளோம். இதில், பெற்றோர் இருவரையும் இழந்த 14 குழந்தைகளுக்கு ₹70 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த 503 குழந்தைகளுக்கு ₹15.09 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 674 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டியுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது,’’ என்றனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது