×

கைது செய்தவர்களை விடுதலை செய்யக்கோரி சமையல் பாத்திரங்களுடன் மக்கள் நூதன போராட்டம்: தேனி கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு

தேனி:  தேனி அருகே, அரண்மனைப்புதூரில் உள்ள முல்லை நகரில் கல் ஒட்டார் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் முத்தையா ஆகியோரை திருட்டு வழக்கில் ராமநாதபுரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்த உறவினர்களை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அச்சமூக மக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று அரண்மனைப்புதூரில் இருந்து நடந்து ஊர்வலமாக தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலகம் முன், கைது செய்தவர்களை விடுதலை செய்யவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவும், அத்துமீறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குடம், சமையல் பாத்திரம், பாய் ஆகியவற்றை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை தரையில் வீசி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் ஆனந்த் மனைவி சாந்தி, முத்தையா மனைவி செல்வி ஆகியோர் கலெக்டர் முரளீதரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தேனி போலீஸ் எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடமும் மனு அளித்தனர். இதனால், கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Theni Collector's Office ,
× RELATED தேனி கலெக்டர் அலுவலகத்தில்...