கடமலை-மயிலை ஒன்றியத்தில் தகவல் தொடர்பு வசதியின்றி தவிக்கும் மலைக்கிராம மக்கள்: செல்போன் டவர் அமைக்க கோரிக்கை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் தகவல் தொடர்பு வசதியின்றி, மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, செல்போன் டவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் சில ஆண்டுகளுக்கு முன் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, கண்டமனூர் ஆகிய கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் செல்போன் டவர்களை அமைத்து, பொதுமக்களுக்கு செல்போன் சேவை, தரைவழி தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றை வழங்கியது. அதன்பின் தனியார் செல்போன் நிறுவனங்களும் டவர் அமைத்து, செல்போன் சேவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடும்பாறை அருகே உள்ள உப்புத்துறை, ஆத்துக்காடு, கருப்பையாபுரம், ஆட்டுப்பாறை, வாய்க்கால்பாறை, வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு, வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம், வண்டியூர், வீரசின்னம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் செல்போன் தரைவழி தொடர்பு உள்ளிட்ட எவ்வித தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கிராம மக்கள் அவசர தேவைக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அவசர நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பதற்காக பல கி.மீ தொலைவில் சென்று, செல்போனில் தொடர்பு கொள்ளும் நிலை உள்ளது. இப்பகுதியில் பிஎஸ்என்எல் செல்போன் டவர் அமைக்க, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. சில சமயங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் மரத்தின் மேல் ஏறி பேசுகின்றனர். எனவே, மலைக்கிராம மக்களுக்கு தகவல் தொடர்பு வசதி கிடைக்கும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் டவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: