செங்கல்பட்டு நகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் அகற்றப்படாத குப்பைகள்: தொற்று நோய் பாதிப்பில் பொதுமக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி முழுவதும் குப்பைகள் முறையாக அகற்றுவது இல்லை. இதனால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் என பீதியடைந்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சி மசூதி தெரு, ஸ்கூல் தெரு, 5வது வார்டு என  10க்கும் மேற்பட்ட இடங்களில், நகராட்சி சார்பில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவது இல்லை. இதனால்,  மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை நாய், பன்றி, மாடுகள் கிளறி விடுகின்றன. இதில், அந்த குப்பை கழிவுகள் சாலைகளில் சிதறி கிடப்பதுடன், காற்றில் பறந்து பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. குறிப்பாக பைக்கில் செல்வோர் மீது விழுவதால், அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.

இதற்கிடையில், மலைபோல் குவிந்துள்ள குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இந்தவேளையில், மர்ம காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கேள்விக்குறியாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தனர். அதற்கு நகராட்சி நிர்வாகம், பச்சையம்மன் கோயில் தெரு  மற்றும் அந்தந்த வார்டுகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பை  என தரம் பிரித்து, அதில் இருந்து உரம் தயாரித்து, அந்த உரங்களை ஏழை விவசாயிகளுக்கு  இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்தது. ஆனால், அந்த திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. உரம் தயாரிக்க அமைக்கப்பட்ட இடங்களில் புதர்மண்டி  கேட்பாரற்று கிடக்கிறது.

அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளில்,  குப்பை சேகரிக்க வாரம் ஒருமுறை மட்டுமே தூய்மை  பணியாளர்கள் வருகின்றனர். இதையொட்டி, குடியிருப்பு பகுதிகளில் குப்பை மலைபோல் தேங்கி உள்ளன. மேலும், தூய்மை  பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு உள்பட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே, செங்கல்பட்டு நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும், குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: