விளாத்திகுளத்தில் வீடுபுகுந்து வாலிபர் திருடிய நகை, பணத்தை மீட்ட தனிப்படை போலீசார் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

குளத்தூர், ஜன. 12: விளாத்திகுளத்தில் வீடு புகுந்து வாலிபர் திருடிய நகை, பணத்தை மீட்ட தனிப்படை போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). விளாத்திகுளம் பஜாரில் ஜெராக்ஸ் கடை நடத்திவரும் இவர், கடந்த 2021ம் ஆண்டு ஜன. 11ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது கதவை திறந்து உள்ளே புகுந்த திருடர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ. 35 ஆயிரத்தை திருடிச் சென்றிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் எஸ்ஐ கங்கைநாத பாண்டியன், காவலர்கள் லிங்கராஜ், குருசாமி ஆகியோர் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

 இதில் எட்டயபுரம் பகுதியில் தனியார் ஓட்டல் முன்பாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்  கார்த்திகேயனுக்கு அடுத்த வீட்டில் வசித்து வரும் சீனிவாசன் மகன் விவேக்ராஜா என்பதும், கார்த்திகேயன் வீட்டை பூட்டி சாவியை வைத்திருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அச்சாவி மூலம் கதவை திறந்து வீடுபுகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றது அம்பலமானது. இதையடுத்து விவேக்ராஜாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 11 பவுன் நகைகளை மீட்டனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

Related Stories: