×

ஆறுமுகநேரியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை திருடி சந்தையில் விற்கமுயன்ற இருவர் கைது

ஆறுமுகநேரி, ஜன.12: ஆறுமுகநேரி, பேயன்விளை பாஸ் நகரை சேர்ந்தவர் சுடலைமணி (62). இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் 12 ஆடுகளை தினமும் காலை 6 மணிக்கு மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவார். வீட்டிற்கு மேல்புறம் உள்ள காலி இடத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மாலை 6 மணிக்கு திரும்பிவிடும். வழக்கம்போல் கடந்த 10ம் தேதி காலை 6 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற 12 ஆடுகளில் மாலை 6 மணிக்கு 11 ஆடுகள் மட்டுமே வீடு திரும்பின. ரூ.10 ஆயிரம் மதிப்பிலான  வெள்ளை  புள்ளிப்போட்ட கிடா ஆட்டை மட்டும் காணவில்லை. இதனால் பதறிய அவர் அருகேயுள்ள இடங்களுக்கு சென்று தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆறுமுகநேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தையில் யாரேனும் தனது ஆட்டை விற்பனைக்கு கொண்டுவரக்கூடும் எனக் கருதிய சுடலைமணி, அங்கு சென்று பார்த்தார். அப்போது இதற்கு முன்னர் தனது வீட்டருகே வாடகைக்கு இருந்த ராமச்சந்திரனும் (32), ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் பத்திரலிங்கம்(42) என்பவரும் இவரிடம் இருந்து திருடிய ஆட்டை விற்பதற்காக சந்தைக்கு கொண்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து    சுடலைமணி இவர்களிடம் கேட்டார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வத்துக்கு சொந்தமானது என்றும் அவர் கூறியதின் பேரில் ஆட்டை விற்பதற்காக கொண்டுவந்ததாகவும் கூறினர். இதையடுத்து இருவரையும் கையும், களவுமாகப் பிடித்த சுடலைமணி, இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த எஸ்.ஐ. அமலோற்பவம், ஆடுகளை திருடியதோடு அதை சந்தையில் விற்க முயன்ற ராமச்சந்திரன், பத்ரலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்த ஆட்டை மீட்டனர். மேலும் தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

Tags : Arumuganeri ,
× RELATED சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?