×

நாகர்கோவிலில் நாகராஜா கோயிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகர்கோவில், ஜன.11 : நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் உள்ள அனந்தகிருஷ்ணருக்கு, ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் தை திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று (10ம்தேதி) காலை தொடங்கியது. காலை 6 மணிக்கு கேரள மாநிலம் திருச்சூர் பாம்பு மேக்கோடு இல்லம் தந்திரி பி.எஸ்.தரன் நம்பூதிரி பூஜைகளை தொடங்கினார். பின்னர் அனந்தகிருஷ்ணன் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.
 இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் பி.எஸ். செந்தில்குமார், காரியம் ஆறுமுகதரன், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, திமுக மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ், கலை இலக்கிய அணி பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் தில்லைசெல்வம், வழக்கறிஞர்கள் கோடீஸ்வரன், சதாசிவம் மற்றும் நாகராஜா கோயில் பக்தர்கள் சங்கம் முத்துகருப்பன், அனந்தகிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளை பொறுப்பாளர் சுதாகர், கொம்மண்டையம்மன் கோயில் பக்தர்கள் சங்கம் சாய்பாபு உள்பட ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். 10 நாட்கள் திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜனவரி 19ம் தேதி மாலையில் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

தேரோட்டம் நடக்குமா?
தை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ம் திருவிழாவான வருகிற 18ம் தேதி  நடக்க வேண்டும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில்  தேரோட்டம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், சமூக இடைவெளி பின்பற்றி கோயிலுக்குள் தான் விழாக்கள் நடத்த வேண்டும் என கூறி உள்ளனர். எனவே தேரோட்டத்துக்கு அனுமதி உண்டா? என்பது பற்றி இன்னும் தெரிய வில்லை. அனுமதி கிடைத்தால் தேரோட்டம் நடக்கும் என்றனர்.

Tags : Thai Festival ,Nagaraja Temple ,Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு