காலாப்பட்டு, ஜன. 11: புதுச்சேரி, காலாப்பட்டு சிறைக்குள் கைதிகள் இருபிரிவாக மோதலில் ஈடுபட்டு சதிதிட்டம் தீட்டிய தகவல் கிடைக்கவே அங்கு சீனியர் எஸ்பி தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி கூர்மையான ஆயுதங்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு கஞ்சா, செல்போன்கள் புழக்கம் இருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களாக சிறைக்குள் மேட்டுப்பாளையம், முத்தியால்பேட்டை- கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த விசாரணை கைதிகள் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் காவல்துறை தலைமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி லோகேஸ்வரன் தலைமையில் கிழக்கு எஸ்பி தீபிகா, எஸ்பி ஜிந்தா கோதண்டராமன், காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், இனியன் மற்றும் ஐஆர்பிஎன் உள்பட 40க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென காலாப்பட்டு சிறையில் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது மோதலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்த இருதரப்பு விசாரணை கைதிகள் தங்கியிருந்த அறைகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளையும் சோதனையிட்ட போலீசார் அங்கு முனைகள் கூர்மையாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தட்டுகள், இரும்பு கம்பிகள், பிளேடுகள், பல்துலக்கும் பிரசுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சுமார் 3 மணி நேரம் சோதனையை முடித்துவிட்டு வெளியே வந்த காவல்துறை அதிகாரிகள், எந்த ஆயுதமும் சிக்கவில்லை என தெரிவித்தனர். இதனிடையே காலாப்பட்டு சிறைக்குள் உள்ள முத்தியால்பேட்டை விசாரணை கைதிகள் உணவு பொருட்களின் கழிவுகளை மேட்டுப்பாளையம் விசாரணை கைதிகள் தங்கியிருந்த அறைக்குள் வீசியதாகவும், இதனால் இரு தரப்பினர் இடையே சிறைக்குள் மோதல் ஈடுபட்டு சதி திட்டம் வகுக்கப்பட்டதாகவும், அதன்பேரில் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் சிறைக்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தியதாகவும், இந்த சோதனையின்போது மோதலில் ஈடுபட இருந்த கைதிகள் சிறப்பாக கவனிக்கப்பட்டு எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த மோதல் விவகாரம் தொடர்பாக சிறைத்துறையிடம் இருந்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.