×

உலர் சாம்பல் செங்கல் தயாரிப்புக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை அதிகரிக்கக் கூடாது

தூத்துக்குடி, ஜன. 11: உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழிலுக்கான   ஜிஎஸ்டி வரி விதிப்பை அதிகரிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தென் மாவட்ட உலர்  சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. மாநில தலைவர் ரவி தலைமை  வகித்தார். செயலாளர் சசிதர், பொருளாளர் அருள்ராஜா முன்னிலை  வகித்தனர். இதில் மண்டல தலைவர் கண்ணன், செயலாளர் அரவிந்த், பொருளாளர் முருகன், மேட்டூர்  மண்டல செயலாளர் தனபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு  தொழிலுக்கு தற்போது இருந்து வரும் 5% ஜி.எஸ்.டி வரியை  12% ஆக அதிகரிக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.  மாவட்டம் தோறும் உலர்  சாம்பலுக்கான விலையை மாவட்ட நிர்வாகிகள் மூலம் நிர்ணயம் செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இதைத்தொடர்ந்து  தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் சசிதர், செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘தமிழகத்தில்  உலர் சாம்பல் மூலம் செங்கல் தயாரிக்கும் 1000க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு  தேவையான மூலப்பொருளான உலர் சாம்பல் அனல்மின்நிலையங்களில் இருந்து  பெறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள உலர் சாம்பலில் 40 முதல் 45% வரை தமிழக  நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது.
தற்போது இந்நிறுவனங்களுக்கு 20% உலர்  சாம்பல் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 20% உலர் சாம்பலை  இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே, இதைச் சேர்த்து அரசாணை வெளியிட வலியுறுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கோரிக்கை   நிறைவேற்றப்படாத பட்சத்தில் சட்டப்போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழிலுக்கு தற்போது  விதிக்கப்பட்டுள்ள 5% ஜி.எஸ்.டி வரியை 12% ஆக உயர்த்துவதற்கு கவுன்சில்  முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. அந்த முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...