வலங்கைமான் ஒன்றியத்தில் 70 மையங்கள் துவக்கம் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பெற்றோர், கல்வியாளர்கள் வரவேற்பு

வலங்கைமான், ஜன.11: கொரனா தொற்று பரவலின் காரணமாக தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாதொற்றுக் காலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கல்வி பாதித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இணைய வழியிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அனைவரும் இந்த திட்டத்தில் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டது. இணைய வசதி, செல்போன் இல்லை, தொலைக்காட்சி இல்லை என்று கூறி பலர் பாடங்களை கற்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலுள்ள வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக, முழுவதும் மாநில அரசின் நிதியில் தேடிக் கல்வி என்ற திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டம் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்டுள்ள கற்றல் பாதிப்பினைக் குறைக்கவும், சரிசெய்யவும், வேறு எந்த மாநிலமும், எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத நிலையில், ஒரு முன்னோடித் திட்டமாக மாணவச் செல்வங்களும், அவர் தம் பெற்றோர்களும் எளிதில் அணுகிப் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்த கிராம அளவில் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் வலங்கைமான் ஒன்றியத்தில் 70 இடங்களில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களுக்கு கதை , பாடல்கள் வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகிறது.

Related Stories: