கொள்ளிடம் அருகே அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும்

கொள்ளிடம், ஜன.11: கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பழைய வகுப்பறை கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசலில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. 1981-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் 2002-ம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகின்றது. மாவட்டத்திலேயே அரசுப் பள்ளிகளில் முதன்மையான மாதிரிப் பள்ளியாக திகழ்கிறது. மேலும் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் இப்பள்ளியில்தான் 1,330 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளும், ஆங்கில வழிக் கல்வியும் இப்பள்ளிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு எதிர்கால வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாகவும் விளங்கி வருகிறது.  இப்பள்ளிக்கு சுமார் 35 வகுப்பறைகள் தேவைப்படுகின்றது. ஆனால், தற்பொழுது 16 வகுப்பறைகளில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றது. முதல் தளத்தில் அமைந்துள்ள 11 வகுப்பறைகள் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க தகுதியற்றதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் வகுப்பறைகளுக்கு செல்ல அச்சப்பட்டு வகுப்பறைகள் திறந்தவெளிப் பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

வடகால், கடவாசல், திருக்கருகாவூர், எடமணல், வேட்டங்குடி, தாண்டவன்குளம் மற்றும் திருமுல்லைவாசல் ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 650க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளிக்கு பேருந்துகளில் வந்து கல்வி பயின்று வருகின்றனர். காலை பள்ளிக்கு வரும்பொழுதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போதும் பேருந்துகளில் நெரிசலுக்கிடையே தினமும் சென்று வருகின்றனர். மேலும், பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் இல்லாமையால் பள்ளி விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்ளும் அவல நிலையும் உள்ளது. எனவே இப்பள்ளி மாணவர்களின் நலன்கருதி பழைய வகுப்பறைை கட்டிடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறைை கட்டிடம் கட்டிக்கொடுக்கவும், பாதுகாப்பான கட்டிட வசதியையும், சுற்றுப்புற சுவரையும், மற்றும் பள்ளி தொடங்கும் போதும், பள்ளி முடிந்து வீடு செல்லும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பேருந்து வசதியை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக கொள்ளிடம் ஒன்றிய குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான அங்குதன் தெரிவித்தார்.

Related Stories: