சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி கலெக்டரிடம் வாழ்த்து பெற்றார்

திருவண்ணாமலை,ஜன.11: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் திருமலை. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் டி.திஷா (3). இந்த சிறுமி சிறு வயதிலேயே தனது அறிவுத்திறனால் சாதனைகளை புரிந்து வருகிறார். இந்திய வரைபடத்தை காண்பித்தால் அதில் உள்ள மாநிலங்களை கூறி எங்கு உள்ளது என்பதை தெரியபடுத்துவது, 43 பழமொழிகளை தமிழில் கூறினால் அதனை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் கூறினால் அதனை தமிழிலும் கூறுவது, 5 வகை நிலங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், பழங்களின் பெயர்கள், 20 வகையான உணவு வகைகளின் பெயர்களை கூறி தனது தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சிறுமியின் திறனை பரிசோதித்த இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் அப்துல்கலாம் உலக சாதனை புத்தக நிறுவனங்கள் சிறுமியின் திறமையை உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கியுள்ளது. உலகசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறுமி நேற்று தனது தாயார் விஜயலட்சுமியுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் பா.முருகேஷிடம் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது கலெக்டர், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆகியோர் சிறுமியை பாராட்டினார்கள்.

Related Stories: