வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் தொடங்கியது: வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

சென்னை: வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்ட 4 புதிய சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையில், ரூ.2,056 கோடி மதிப்பீட்டில் சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகள் துவங்கி, தற்போது படிப்படியாக பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு வருகிறது. இதில், ஏற்கெனவே சாலை பணிகள் முடிந்த பகுதிகளான முடிச்சூர் அருகே வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கோலப்பஞ்சேரி, நெமிலிச்சேரி அருகே பாலவேடு, மீஞ்சூர் அருகே சின்ன முல்லைவாயல் என 4 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்த 4 புதிய சுங்கச்சாவடிகள் நேற்று திறக்கப்பட்டு, கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், வாகனங்களுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ரூ.20ல் இருந்து ரூ.720 வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதாவது, வண்டலூர் - நசரத்பேட்டை வரை கார், ஜீப் வாகனங்களுக்கு ரூ.47, சரக்கு வாகனத்திற்கு ரூ.75, பஸ்சுக்கு ரூ.158, கனரக வாகனத்திற்கு ரூ.248, பெரிய கனரக வாகனத்திற்கு ரூ.301 என ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றபடி, வாகன கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுங்கச்சாவடி அமைத்து, கட்டணம் வசூலிக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, நேற்று வரதராஜபுரம் சுங்கச்சாவடி அதிகாரியை சந்தித்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த  லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாராயணன் கூறுகையில், ‘‘இப்பகுதியில்,  டோல்கேட் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், வரதராஜபுரம் பகுதியில் உள்ள இந்த சுங்கச்சாவடி சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு கல்குவாரிகள் செயல்படுவதால், லாரிகள் இந்த சாலையை பலமுறை பயன்படுத்த வேண்டியுள்ளது. சுங்கச்சாவடியை சுத்தி 10 கிலோ மீட்டரில் உள்ள லாரி உரிமையாளர்கள் இச்சாலையை பலமுறை பயன்படுத்த வேண்டி உள்ளது. எனவே, உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பதில் சலுகை அளிக்க வேண்டும்.

எங்கள் கோரிக்கை குறித்து, சுங்கச்சாவடி நிர்வாகம் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது’’ என தெரிவித்தார். இதுகுறித்து சரக்கு வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி, ஊரடங்கு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொழில் பாதித்து, வாழ்வாதாரம் இழந்து பலர் தவித்து வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, மேற்கண்ட 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: