×

காரியாபட்டி அருகே பயிர்களை கடந்து செல்லும் பிரேதங்கள் மயானத்திற்கு பாதை வசதி அமைக்க கோரிக்கை

காரியாபட்டி: காரியாபட்டி அருகேயுள்ளது சத்திர புளியங்குளம் கிராமம். இங்குள்ள காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூரின் மயானத்திற்கு பல ஆண்டுகளாக மேற்கூரை, பாதை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக தொடர் மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதிலும், இறுதி காரியங்கள் செய்வதிலும் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இவ்வூரில் வயது முதிர்வால் மரணமடைந்த திருக்குமரன் (65) என்பவரது உடலை உறவினர்கள், கிராமமக்கள் பல மணிநேரம் போராடி சேறும், சகதியுமான வயல்வெளியில் சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சத்திர புளியங்குளம் மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவர்கள் உடல்களை விளை நிலங்களில் கொண்டு செல்கிறோம். இதனால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது. மேற்கூரை இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செய்யவும், இறுதி காரியங்கள் செய்யவும் பெரும் சிரமப்படுகிறோம்.
எனவே மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் மயானத்திற்கு மேற்கூரை, பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kariyapatti ,
× RELATED காரியாபட்டி நகரில் தேங்கி கிடக்கும்...