மற்ற மாநிலங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்கள் முன்னோடி: முன்னாள் அமைச்சர் பேச்சு

காரைக்குடி: மக்களுக்காக முதல்வர் அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளன முன்னாள் அமைச்சர் தென்னவன் தெரிவித்தார். காரைக்குடி பகுதியில் தமிழக முதல்வர் அறிவித்த பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். எம்எல்ஏ மாங்குடி தலைமை வகித்து பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் மகளிருக்கான இலவச பயண சலுகை, பால் விலை குறைப்பு என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். தமிழக மக்கள்

இப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இத்திட்டம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்றடைவதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிப்படுகிறது என்றார். பொங்கல் தொகுப்பினை வழங்கி முன்னாள் அமைச்சர் தென்னவன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்துவதே தனது லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். முதல்வர் அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளன. பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் சிறப்பாக கொண்டாட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிச்சயம் பொருட்கள் வழங்கப்படும் என்றார். காங்கிரஸ் நகர தலைவர் பாண்டிமெய்யப்பன், திமுக நகர துணை செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: