கரும்பு சிறியதாக இருப்பதாக கூறி ரேஷன் கடை ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது

சேலம்: சேலத்தில் கரும்பு சிறியதாக இருப்பதாக கூறி, ரேஷன் கடை ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் சந்தனக்காரன்காடு பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு சேல்ஸ்மேனாக கார்த்திக்(40) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை கடையை திறந்த கார்த்திக், வழக்கம் போல் பொங்கல் பரிசு பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான கோபால் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த கார்த்திக்கிடம் கரும்பு சின்னதாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக பிரமுகர் கோபால், ரேஷன் கடை ஊழியர் கார்த்திக்கின் சட்டையை பிடித்து இழுத்து, கன்னத்தில் பளார் என்று அடித்துள்ளார். இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் கோபாலை(35) கைது செய்தனர். அவரது அண்ணன் நடேசனை தேடி வருகின்றனர்.

Related Stories: