×

கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு அறுவடை பணி தீவிரம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம்: கொல்லிமலை அடிவார பகுதியில், பாக்கு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். நாமக்கல் மாவட்டம்,  கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி, வெண்டாங்கி, நடுக்கோம்பை வாழவந்திகோம்பை, புளியங்காடு, தேர்புளிய மரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பாக்கு மரங்களை வளர்த்து வருகின்றனர். நடவு செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு, மரத்தில் பூ பிடித்து பாக்கு காய்கள் காப்புக்கு வரும். நடப்பாண்டு கொல்லிமலை அடிவாரப் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால், பாக்கு மரங்களில் அதிக அளவிலான காப்புகள் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முழுவதும், இப்பகுதியில் பாக்கு அறுவடை பணிகள் நடைபெறும்.

இப்பகுதியில் விளையும் பாக்கு காய்களை, சேலம் மாவட்டம் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி சிங்கிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், நேரடியாக விவசாயிகளை சந்தித்து, பாக்கு தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தொழிலாளர்களை கொண்டு பாக்கு அறுவடை செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு 70 கிலோ எடைகொண்ட ஒரு மூட்டை பாக்கு ₹3,500 முதல் ₹4 ஆயிரம் வரை விற்பனையாகிறது. நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில், பாக்கு விலையும் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kollimalai ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...