2 இடங்களில் செயல்படும் என்ற அறிவிப்பால் உழவர் சந்தை முன் விவசாயிகள் மறியல்: ஓசூரில் பரபரப்பு

ஓசூர்: ஓசூர் உழவர் சந்தை 2 இடங்களில் செயல்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சந்தை முன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தையில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் உழவர் சந்தையை இரண்டு இடங்களில் அமைக்க அறிவுறுத்தியுள்ளது. கடந்த கொரோனா தொற்று பரவிய போது, உழவர் சந்தை ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், ஓசூர் ராமநாயக்கன் ஏரி பகுதியிலும் செயல்பட்டது.

அதே போல், தற்போதும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தற்போது இயங்கி வரும் பகுதியிலேயே விற்பனை செய்வோம் என்றனர். மேலும், இதனை கண்டித்து உழவர் சந்தையின் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டவுன் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்று(நேற்று) ஒரு நாள் மட்டும் உழவர் சந்தை வழக்கமான இடத்தில் செயல்படும் என்றும், மாலையில் ஆர்.வி. ஆரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓசூர் ராமநாயக்கன் ஏரி பகுதியிலும் சந்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் சமரசம் ஏற்பட்டதால் விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: