அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஜன.9: கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்திபெற்ற அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலை வேலூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை அணையாளர் ஜெயராமன், தர்மபுரி உதவி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலில் உள்ள பதிவேடுகள், கோயிலின் பரப்பளவு, கட்டிடங்கள், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி கோயில்களில் ஆய்வு நடந்து வருகிறது. குறிப்பாக கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோயில் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் சில தனிநபர்கள் கோயிலை ஆக்கிரமித்துள்ளனர். அறநிலையத்துறைக்கு தெரியாமல் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.  இங்கு நடந்துள்ள தவறுகள் குறித்து உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும்.

மேலும் அறநிலையத் துறையில் தவறாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்து நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தாக்கல் செய்யப்படும். கோயில் வளாகத்தில் மரம் வெட்டப்பட்டுள்ளது. அதன் மீதும் புகார் செய்யப்படும். போலி ஆவணங்கள், முத்திரைகள் மூலம் தனி நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார வளாகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதற்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அரசு சொத்து அபகரித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் தடுக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளுடன் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணனும் ஆய்வில் கலந்துகொண்டார்.

Related Stories: