×

இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு சாலைகளில் சுற்றினால் கடும் நடவடிக்கை குமரியில் 1500 போலீஸ் கண்காணிப்பு

நாகர்கோவில், ஜன.9 :  முழு ஊரடங்கையொட்டி குமரி மாவட்டத்தில் இன்று 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் கடந்த 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மதவழிபாட்டு தலங்களில் ெபாதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஞாயிற்றுக்கிழமையில், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று (9ம்தேதி)  தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஊரடங்கையொட்டி, குமரி மாவட்டத்திலும்  போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்ெகாள்ள இருக்கிறார்கள். காவல் துறையினர், ஆயுதப்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

சுமார் 55 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்காவிளை உள்பட மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படாது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அரசு பஸ் போக்குவரத்தும் முழுமையாக ரத்து  செய்யப்படுகிறது. ஆட்டோக்கள், வேன்கள் உள்பட எதுவும் இயங்க அனுமதியில்லை. மருத்துவ தேவைகளுக்காக செல்பவர்கள் அது தொடர்பான ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். தொலை தூர நகரங்களில் இருந்து பஸ், ரயில்களில் வருபவர்கள் டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் கூறி உள்ளனர். இறைச்சி கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் எதுவும் இயங்காது என்பதால், பொதுமக்கள் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதற்காக கோட்டார், வடசேரி பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று மாலை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இறைச்சி வகைகளையும் மக்கள் வாங்கி சென்றனர்.

 ஊரடங்கையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. பத்ரி நாராயணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இது குறித்து எஸ்.பி. கூறுகையில், ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் முகவசம் அணிவதுடன், தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...