×

சிவகாசி சிவன் கோயில் முன்பு தொடரும் ஆக்கிரமிப்பு பக்தர்கள், வாகனஓட்டிகள் அவதி

சிவகாசி, ஜன. 9: சிவகாசி சிவன் கோயிலை சுற்றி தொடரும் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள், வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகாசியில்  நகரின் மையத்திலுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. அறநிலைய  துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு  முன்பு கடடப்பட்டது. இக்கோயிலுக்குள் துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி,  முருகன், பைரவர், நவகிரகங்களும் நிறுவப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமான  பக்தர்கள் இங்கு  அதிகம்  வந்து செல்கின்றனர்.  பிரதோஷம் போன்ற விசேஷ  தினங்களில்  சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த  பக்தர்களும் இக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  

வடக்கு  ரத வீதியில் கோயிலின் சுவரை ஒட்டி தள்ளுவண்டி பழக்கடைகள் அமைத்துள்ளனர்.  இதனால் பக்தர்கள் ரதவீதியை சுற்றி வர வழியின்றி அவதிப்படுகின்றனர். மேலும்  தள்ளுவண்டி கடைகளால் வடக்கு ரதவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுவதால் வாகனஓட்டிகள் தினமும் சிரமப்படுகின்றனர். வடக்கு ரத வீதியில்  மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு 10 க்கும் மேற்பட்ட  பழக்கடைகள்,  ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சிவகாசி மாநகராட்சி  நிர்வாகத்திற்கு மாதந்தோறும் வாடகை செலுத்துகின்றனர்.

சிவன் கோயில்  ரதவீதி பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்  இதனை மீறி ஏராளமான நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்து  போக்குவரத்திற்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.  எனவே  மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி  அமைத்துள்ள தற்காலிக கடைகளை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi Shiva Temple ,
× RELATED சிவகாசி சிவன் கோயில் முன்பு நோ...