×

தேவதானப்பட்டி அருகே மாம்பழ கூழ் தயாரிப்பு தொழிற்சாலை காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

தேவதானப்பட்டி, ஜன. 9: தேவதானப்பட்டி அருகே காட்ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் பிரதான தொழிலாக விவசாயமும், தமிழகத்தில் மா உற்பத்தியில் இரண்டாவது இடமாகவும் உள்ளது. பெரியகுளத்தில் ஏற்றுமதி தரம் வாய்ந்த மாங்காய்களை 50ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பெரியகுளத்தில் மா விவசாயிகள் மாம்பழம் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் தேவதானப்பட்டி அருகே காட்ரோட்டில் வேளாண்மை விற்பனைதுறை மற்றும் வணிகதுறையின் மூலமாக ரூ.5 கோடி செலவில் ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்களை பதப்படுத்தும் நிலையம் மற்றும் ஒரு மணி நேரத்தில் 15டன் மாம்பழங்களை கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டப்பட்டது.

இந்த தொழிற்சாலையை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், மாவட்ட கலெக்டர் முரளீதரன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன், வேளாண்மை துணை இயக்குனர் பால்ராஜ், வேளாண் விற்பனை குழு செயலாளர் ஆறுமுகராஜன், வேளாண்மை விற்பனை குழு வாரிய உதவி பொறியாளர் வடிவேல், வேளாண்மை அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் பெரியகுளம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் எல்.எம்.பாண்டியன், யூனியன் சேர்மன் தங்கவேலு, கெங்குவார்பட்டி முன்னாள் சேர்மன் தமிழன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Devadhanapatti ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...