திருவேங்கடத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட புதிய கட்டிடம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

திருவேங்கடம், ஜன.9: திருவேங்கடத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் மின்வரிய அலுவலகத்திற்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது: இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2000 மெட்ரிக் டன் கிட்டங்கி, உலர் களம், விவசாயிகள் ஓய்வு அறை, தரம் பிரிப்பு அறை, சிப்பம் கட்டும் அறை ஆகிய கட்டிடங்கள் புதிதாக கட்டி திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. கிட்டங்கியில் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை குறைந்த வாடகையில் 180 நாட்கள் வரை வைத்து பயனடையலாம். மேலும் தங்கள் விளைபொருட்களை உலர் களத்தில் காய வைத்து கிட்டங்கிகளில் இருப்பு வைத்துக்கொள்ளலாம். எனவே திருவேங்கடம் பகுதிக்கு உட்பட்ட விவசாயிகள் புதிதாக திறக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி விற்பனைக் குழு தனி அலுவலர் முருகானந்தம், தென்காசி வேளாண்மை வணிகத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார், திருநெல்வேலி விற்பனைக் குழு செயலாளர் திருமதி எழில், குருவிகுளம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சேர்ம துரை, பேரூர் செயலாளர் பவுல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாடத்தி, சரஸ்வதி, திருநெல்வேலி விற்பனைக் குழு கண்காணிப்பாளர்கள் ராஜசேகர், எடியேல்சந்திரன், மாரி மற்றும் திருவேங்கடம் பகுதி வியாபாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். திருவேங்கடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.

Related Stories: