கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள்குறைதீர் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம் காணொலி மூலம் பங்கேற்கலாம்: நாகை கலெக்டர் தகவல்

நாகை, ஜன.9: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாகை மாவட்டத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (10ம் தேதி) முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அரசின் மறு உத்தரவு வரும் வரை நாளை (10ம் தேதி) முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி குறைதீர் கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முதலில் தங்களது செல்போனில் ‘Bharat vc’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதன்பின்னர் https://bharatvc.nic.in/viewer/ 7274914749 லிங்கை கொடுத்து அதில் பாஸ்வேர்ட் என்ற இடத்தில் 966557 என்பதை கொடுத்து காணொலி வாயிலாக குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். கூடுதல் தகவல் அறிய //www.nagapattinam.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும். கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நபர்கள் காலை 10.30 மணி முதல் இணையலாம். பொதுமக்களின் மனுக்கள் நேரடியாக பெற இயலாது என்பதால் எழுத்துப்பூர்வமாக எழுதி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள பெட்டியில் முககவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியை பின்பற்றி மனுக்களை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: