×

கொரோனா பரவல் எதிரொலி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் அடைப்பு

சின்னமனூர், ஜன. 8:  தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவத்துவங்கியுள்ளது. அத்துடன் ஒமிக்ரானும் வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  பொதுமக்கள்  கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளி  பின்பற்றப்பட வேண்டும் என்றும், கூட்டம் கூடும் கோயில்கள் எல்லாம்  அடைக்கப்படும்  என்றும் அரசு அறிவித்துள்ளது. சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில்  சுரபி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருவது வழக்கம்.

இங்கு ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்பாக நடப்பதால் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். அதேபோல் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குச்சனூர்  சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலின் முன்புறம் தகரம் வைத்து அடைக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்பட்டது.

Tags : Kutchanur Saneeswara Bhagavan temple ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு