பெரியகுளம் பகுதியில் 200 ஏக்கர் கரும்பு தேக்கம் அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம், ஜன. 8: பெரியகுளம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள 200 ஏக்கர் கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, காமாட்சி அம்மன் கோயில், மஞ்சளார், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பொருள்களுடன் கரும்பு சேர்த்து வழங்கப்படுவதால் கடந்த ஆண்டு வரை இந்த பகுதியில் இருந்து 40 முதல் 50 லாரிகளில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலமாக பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரையில் விசாயிகளிடம்  அரசு சார்பாக பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு கரும்பை இரண்டு நபர்களுக்கு பகிர்ந்து கொடுத்த போது 40 லாரிகள் ஏற்றி சென்ற நிலையில் இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு முழு கரும்பு வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்ததால் இந்த ஆண்டு கூடுதலாக தமிழக அரசு கூட்டுறவுதுறை மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இதுவரையில் இருகட்டு கரும்பு கூட கொள்முதல் செய்யப்படாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், தேவதானபட்டி பகுதியில் 240 ரூபாய் விலையில் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து கூடுதல் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக அரசு தரப்பில் கூறுவது வேதனையாக உள்ளது. ஒரு கட்டு கரும்பு கூட அரசு கொள்முதல் செய்யவில்லை. எனவே, எங்கள் பகுதியில் 200 ஏக்கரில் உற்பத்தியாகி உள்ள பொங்கல் கரும்பை என்ன செய்வது என தெரியவில்லை. எனவே, தமிழக அரசு அந்த அந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: