இளம்பெண் பெற்றோருடன் தர்ணா திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

திருமங்கலம், ஜன. 8: உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகள் பாலஜோதிகா (21). பிஎஸ்சி பட்டதாரி. இவருக்கும், திருமங்கலம் கட்ராம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கண்ணன் கேரளாவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவருடன் தனிக்குடித்தனம் நடத்திய பாலஜோதிகா, கொரோனா காலத்தில் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இங்கிருந்து முதுகலைப் பட்டத்திற்கு படிக்கத் தொடங்கினார். இந்நிலையில், மனைவியுடன் வாழ விருப்பமில்லை என விவாகரத்து கேட்டு, கண்ணன் நீதிமன்றத்தை நாடினார். திருமணத்தின்போது பெற்றோர் சீதனமாக வழங்கிய 13 பவுன் நகை, பண்ட பாத்திரங்களை திருப்பிக் கொடுத்தால், விவாகரத்துக்கு சம்மதிப்பதாக பாலஜோதிகாவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கண்ணன் குடும்பத்தினர் நகைகளையும், சீதனமாக கொடுத்த பண்டபாத்திரங்களையும் கடந்த 3 மாதங்களாக தராமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலஜோதிகா, அவரது தந்தை வெள்ளையன், தாய் அமுதா, பாட்டிகள் சின்னம்மா, பெருமாயி, முத்துமணி ஆகியோர் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ஜீப் நிறுத்தப்படும் இடத்தில் நேற்று அமர்ந்து, திருமண சீர்வரிசைகளை கண்ணன் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத்தரக்கோரி தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் டவுன் போலீசார், அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories: