திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க 900 போலீசார் நியமனம் 16 இடங்களில் சோதனை சாவடி அமைத்து வாகனத் தணிக்கை

திண்டுக்கல், ஜன. 8:தமிழகத்தில் கொரோனா தோற்று உருமாறி ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து நேற்று முதல் இரவு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல் வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுளளது.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கை பணிக்கு 900 போலீசார் நியமித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட போலீசார் இரண்டு குழுவாகப் பிரிந்து சுழற்சி முறையில் விடிய விடிய பணியில் ஈடுபடுவார்கள். மேலும், 16 இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் முக்கிய பகுதிகளான வெள்ளை விநாயகர் கோவில், பெரிய கடை வீதி, திருச்சி ரோடு, பழனி ரோடு, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம், ஊரடங்கை மீறி ஊர்சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 14 சுகாதார ஆய்வாளர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும், முக்கியமாக ஓட்டல்கள், திரையரங்குகள், அழகு மற்றும் உடற்பயிற்சி நிலையம் மற்றும் கடைகளில் விதிமீறி அதிகளவில் மக்கள் கூடுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: