பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் கரும்பு விற்பனை தீவிரம்

ஈரோடு,ஜன.8: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் மாநகரில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது கரும்பு. இந்நிலையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தி, கவுந்தப்பாடி, பவானி, கொடுமுடி மற்றும் சமயசங்கிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள், பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த கரும்புகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து, ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் சாலையோர கடைகள் அமைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கரும்பு விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு நல்ல மழை பொழிவு, ஆற்றில் தண்ணீர் வரத்து போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு கரும்பு நல்ல மகசூல் கொடுத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் ஒரு ஜோடி கரும்பு ரூ.80க்கும், மூன்று கரும்பு ரூ.100க்கும் விற்பனை செய்கிறோம். பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால் மக்களும் கரும்புகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: