×

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் ஆதார் எண், கருவிழி ரேகை பதிவு கட்டாயம்; 63 சார்பதிவகங்களில் பணிகள் தொடங்கின

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 63 சார்பதிவகங்களில் நேற்று முதல் ஆதார் எண் மற்றும் கருவிழி ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இங்கு, பொதுமக்கள் தங்களது சொத்து குறித்த விற்பனை, விற்பனை ஒப்பந்தம், தான செட்டில்மெண்ட், குத்தகை, அடமானம், உயில் போன்ற ஆவணங்களை பதிவு செய்கின்றனர். மேலும் இந்து திருமண பதிவு, சிறப்பு திருமண பதிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பதிவுத்துறை முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு, ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இதற்காக பிரபல மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ஆவணப்பதிவுகள் செய்யப்படுகின்றன.

தற்போதுள்ள, மென்பொருள் மூலம் ஆவணங்களை பதிவு செய்ய வருபவரின் பயோமெட்ரிக் கைரேகை பெறறு, வெப் கேமரா மூலம் அவரது முகம் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில், நீதிமன்ற அமைப்பு போல உயரமான நிலையில் சார்-பதிவாளர்கள் அமராமல் பொதுமக்களுக்கு சமமாக அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வரும்போது அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆவணம் பதிவு செய்யும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இனி ஒரு சொத்தினை கிரயம் வாங்குபவர் மற்றும் விற்பவர், சாட்சிகளின் ஆதார் எண்ணை மட்டுமே அடையாளமாக பயன்படுத்த முடிவு செய்து, மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவரின் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்யும்போது, அது ஆதார் ஆணையத்தின் இணைய தளத்துக்குள் சென்று ஆவணத்தை பதிவு செய்பவரின் உண்மை தன்மையை சோதிக்கிறது.

இதன் மூலம் தவறானவர் ஒருவர், போலியாக ஆள் மாறாட்டம் செய்து பத்திரப் பதிவு செய்ய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண் குறிப்பிடப்பட்டவரின் கைரேகை சரியாக பதிவாகாத நிலையில், அவரது கருவிழிப்படலத்தை ஸ்கேன் செய்து, அதை ஒப்பீடு செய்து பதிவு செய்யும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் 10 சார்-பதிவகங்களில் இந்த நடைமுறை சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து, நேற்று முதல் சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 63 சார்பதிவகங்களில் ஆதார் எண் குறிப்பிடுதல் மற்றும் கருவிழி படலம் பதிவு செய்தல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இனி ஆவணங்களை தயாரிப்போர் ஒரு சொத்தை விற்பனை செய்பவர், வாங்குபவரின் அடையாளத்தை குறிப்பிடும்போது ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை குறிப்பிடுவதற்கு பதிலாக ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags : Aadhar ,Chennai ,Kanchipuram ,
× RELATED சென்னை, காஞ்சிபுரத்தில் முதியோர்கள்,...